தெஹ்ரான்
அமெரிக்கா தாக்கினால் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துருக்கியின் அங்காரா நகரில் நடந்து வரும் நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என கூறினார்.
இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. ஈரானுடன் பேசி நேரம் வீணாக்க விரும்பவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 3 கப்பல்களை தாக்கி ஈரான் அழித்து விட்டது என்று குற்றச்சாட்டாக கூறினார்.
அமெரிக்கா, தங்களுடைய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டது என கூறி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.
ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வார கால ஒப்பந்தம் காலாவதியான நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், ஈரானை கடுமையாக எச்சரிக்கும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார். ஈரான் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றது. நேற்று இரவு ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். நிலைமை எப்படி அமைகிறது? என பார்ப்போம். ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக மக்களை கொன்று வருகிறது என்று டிரம்ப் கடுமையாக கூறினார்.
டிரம்ப் தொடர்ந்து கூறும்போது, கார்க் தீவை நாங்கள் எடுத்து கொள்வோம் என்றார். நாங்கள் ஈரானுக்கு தடை விதிப்போம். தேவைப்பட்டால் ஈரானை மட்டும் இலக்காக கொள்ளும் வகையில் முற்றுகையிடுவோம் என்றும் கூறினார்.
இந்த சூழலில், அமெரிக்கா புதிதாக தாக்கினால் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது. டிரம்ப் அளித்த பேட்டியின் தொடர்ச்சியாக, சில வாரங்களாக குறைந்து வந்த எண்ணெய் விலை, மீண்டும் உயர்ந்து உள்ளது. இரவு 8.30 மணியளவில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 8 சதவீதம் அதிகரித்து விட்டது.