தெஹ்ரான்
ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் கடற்படை பிரிவுக்கான தளபதி அலிரெசா தங்சிரி. இந்நிலையில், பந்தர் அப்பாஸ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பலியாகி விட்டார் என பெயர் வெளியிட விருப்பமில்லாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார் என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் என்ற இஸ்ரேல் ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இதுபற்றி ஈரான் நாடோ அல்லது இஸ்ரேல் ராணுவமோ எதுவும் கூறவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதற்கான முழு பொறுப்பும் தங்சிரியின் வசமே இருந்தது. அவரே அதற்கு பொறுப்பாக இருந்தவர் என்று அந்த ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
4 வாரங்களாக போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.
அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார். ஆனால் அமெரிக்கா, ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்பான எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரான் ராணுவமும், ட்ரூ பிராமிஸ் 4 என்ற பெயரில், மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல் ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க படை தளங்கள் மீது நவீன ரக ஆயுதங்களுடன் கூடிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் கூட்டணி அமைத்து நடத்தும் தாக்குதலுக்கு உடனடி பதிலடியாக இந்த தாக்குதலில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.