தெஹ்ரான்,
ஈரானை சேர்ந்த பாடகி ஹிஜாப் அணியாமல் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவருக்கு 74 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
ஈரானை சேர்ந்த பாடகி பிரஷ்டொ அகமதி (வயது 29). இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானில் நடந்த இசைநிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடினார். இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த யூடியூப் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
அதேவேளை, ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்டதாக பிரஷ்டொ அகமது மீது ஈரான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். மேலும், அவரை ஈரான் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட பிரஷ்டொ அகமதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமினில் விடுதலை செய்யப்பட்டபோது பிரஷ்டொ அகமதி மீதான வழக்கு ஈரான் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரஷ்டொ அகமதி குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், பிரஷ்டொ அகமதிக்கு 74 கசையடிகளை தண்டனையாக கொடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிரஷ்டொ அகமதி 2 ஆண்டுகள் வெளிநாடு செல்லவும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய ஈரான் பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.