உலக செய்திகள்

ஈரான் மூத்த ராணுவ தளபதி படுகொலை; இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி

அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஈரானின் பசிஜ் படை பிரிவின் மூத்த ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் குலாம்ரெசா சுலைமானி.

ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பசிஜ் துணை ராணுவத்திற்கு தலைமையேற்று செயல்பட்டு வந்த இவர், கூடாரத்தில் தங்கியிருந்தபோது, தாக்கி வீழ்த்தப்பட்டார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. பொதுவாக தலைமையகத்தில் இருக்கும்போது கண்டறிந்து விட கூடாது என்பதற்காக கூடாரத்தில் தங்கியுள்ளார். அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இதில், சுலைமானியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த பசிஜ் துணை ராணுவம், பல்வேறு வன்முறைகளை பரப்பி விட்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ஆயுதங்களை கொண்டு தாக்கியும் வந்துள்ளது என இஸ்ரேல் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு தெரிவிக்கின்றது.