உலக செய்திகள்

இந்தியாவில் ஸ்டார்லிங் தடுக்கப்படுகிறதா? எலான் மஸ்க் பதிவால் பரபரப்பு

இந்திய மக்களிடையே தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக சில தொழிலதிபர்கள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுத்து வருகிறார்கள் என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை அறிமுகம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிலர் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுத்து வருகிறார்கள்

எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இந்திய மக்களிடையே தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக சில தொழிலதிபர்கள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம். இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான பெரும்பாலான உள்கட்டமைப்புப் பணிகளை ஸ்டார்லிங் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் 20 கேட்வே தளங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆன்டெனாக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டார்லிங்க் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், ஸ்டார்லிங்க் இந்தியாவில் வர்த்தக ரீதியாக சேவையைத் தொடங்குவதற்கு இறுதி பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சில ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான் எலான் மஸ்க் மேற்கூறிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எலான் மஸ்க் பெயர் குறிப்பிடாவிட்டாலும், அவரது பதிவு இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானி மற்றும் சுனில் பார்தி மிட்டல் ஆகியோரை மறைமுகமாகக் கூறுவதாக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT