உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர், இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் சீக்கியர், இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. அங்கு சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது.

இங்கு ஒரு ஆஸ்பத்திரியை திறக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார். அவரை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்து இருந்தனர். திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக ஜலாலாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

SCROLL FOR NEXT