பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், பிரதமருமான இம்ரான் கான் பதவியிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து ஊழல் வழக்குகள் பாய்ந்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும்பாலான வழக்குகளில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னும் சிறையிலேயே உள்ளார்.
இந்த நிலையில், தங்களது தலைவரை விடுதலை செய்யக் கோரி அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் எதிர்க்கட்சியினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பிரமாண்ட பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்தவும், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும் பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்தின் முக்கிய நுழைவு வாயில்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து, மணல் நிரப்பப்பட்ட ராட்சத இரும்பு கன்டெய்னர்களைக் கொண்டு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் மிகப்பெரிய தடுப்பு அரண்களை அமைத்து வருகின்றனர். இதற்காக, கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக ரீதியான சரக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர்களைப் போலீசார் கட்டாயமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.பஞ்சாப் மாகாணத்துக்குள் நுழைந்தாலே லாரிகள் மற்றும் கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்படுவதால், டிரைவர்கள் அங்கு செல்ல முற்றிலும் மறுத்துவிட்டனர். இதனால், 1,400 கி.மீ தொலைவில் உள்ள நாட்டின் முக்கிய வர்த்தக நுழைவாயிலான கராச்சி துறைமுகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்டெய்னர்கள் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கன்டெய்னருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, இந்த முடக்கத்தை உடனடியாகத் தீர்க்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கராச்சி சரக்கு போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.