உலக செய்திகள்

இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு: டிரம்ப் அறிவிப்பு

உலகம் முழுவதிலும் 9 போர்களை நிறுத்தியது எனக்கு கவுரவம் அளிக்கிறது என டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன் டி.சி.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதில், லெபனான் நாட்டில் மக்கள் பலர் பலியானார்கள். போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று கூறும்போது, லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தீவிர ராஜதந்திர முயற்சிகளின் விளைவாக இது ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது என்று கூறினார். இதன்படி, 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

34 ஆண்டுகளில் முதன்முறையாக இரு நாடுகளின் தலைவர்களும் வாஷிங்டன் டி.சி.யில் சந்தித்து கொண்டனர். போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்காக, எங்களுடைய துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் வெளியுறவு துறை மந்திரி ரூபியோ ஆகியோர் அமெரிக்க படைகளின் தலைமை தளபதி டேன் கெயின் உடன் ஒன்றிணைந்து, நீண்ட அமைதி ஏற்படுவதற்காக இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினர்.

உலகம் முழுவதிலும் 9 போர்களை நிறுத்தியது எனக்கு கவுரவம் அளிக்கிறது. இது 10-வது போர் ஆகும். அதனை நாம் செய்வோம் என்று கூறினார்.