உலக செய்திகள்

ஹவுதிகள் தாக்குதல்: இஸ்ரேலின் உதவியை நாடிய சவுதி அரேபியா

இஸ்ரேலுடன் இதுவரை எந்தவித தூதரக உறவையும் சவுதி அரேபியா மேற்கொள்ளவில்லை.

ரியாத்,

ஹவுதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

சவுதி மீது ஹவுதி தாக்குதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். குறிப்பாக, ஏமனின் பாப் அல் மண்டப் ஜலசந்தி பகுதியை ஹவுதி கைப்பற்றியுள்ளது. இந்த ஜலசந்தி பகுதி அரபிக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாகும். இந்த ஜலசந்தி வழியாகவே ஆசியா - ஐரோப்பா இடையே கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்த கடல்வழி பாதையையே பயன்படுத்தி வருகின்றன.

பாப் அல் மண்டப் ஜலசந்தியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கச்சா எண்ணெய் குழாய்கள், சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் சவுதி அரேபியாவில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலின் உச்சமாக இஸ்லாமிய மதத்தினரின் புனித தலமாக கருதப்படும் சவுதியில் உள்ள மெக்கா நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஹவுதிகள் ஏவிய டிரோன்களை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பு மெக்கா வான்பரப்பில் சுட்டு வீழ்த்தியது. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைவிட்ட பாகிஸ்தான், துருக்கி

அதேவேளை, சவுதி மீது தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுள்ள பாகிஸ்தானும், துருக்கியும் இதுவரை உதவ முன்வரவில்லை. நாடுகளுக்கு இடையேயான தாக்குதலின்போதுதான் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதலுக்கு ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று கூறி பாகிஸ்தானும், துருக்கியும் சவுதியை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உதவியை நாடிய சவுதி

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது. இஸ்ரேலுடன் இதுவரை எந்தவித தூதரக உறவையும் சவுதி அரேபியா மேற்கொள்ளவில்லை. மேலும், இஸ்ரேலை தனி நாடாகவும் சவுதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவை தொடங்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

தற்போது இஸ்ரேலின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலின் உதவியை சவுதி நாடியுள்ளது. ஹவுதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள உதவுமாறு அமெரிக்காவிடம் சவுதி வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சவுதிக்கு நேரடியாக உதவி செய்ய அமெரிக்கா மறுத்துள்ளது. பின்னர், ஹவுதி தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தன் மூலம் சவுதி , இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, ஹவுதி தாக்குதலை எதிர்கொள்ள உதவுமாறு இஸ்ரேலிடம் சவுதி வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு உதவ இஸ்ரேல் முன்வந்துள்ளது.

உளவு தகவல்கள்

அதன்படி, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைகள், ராணுவ கட்டமைப்புகள், ஆயுத கிடங்குகள், தாக்குதல் முறைகள் உள்பட பல்வேறு உளவு தகவல்களை வழங்குமாறு இஸ்ரேலிடம் சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளின் அடிப்படையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறித்த உளவு தகவல்களை சவுதி அரேபியாவிடம் வழங்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வழங்கும் உளவு தகவல்கள் அடிப்படையில் ஹவுதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சவுதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT