உலக செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: கடல் ஆமைகளின் பாதுகாவலர் மோனா கலீல் உயிரிழப்பு

ஜூன் 4-ம் தேதி தெற்கு லெபனானில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மோனா கலீல் பெரும் காயமடைந்தார்.

பெய்ரூட்,

லெபனான் மீது கடந்த 4-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெரும் காயமடைந்த கடல் ஆமைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் மோனா கலீல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இஸ்ரேல்-லெபனான் மோதல்:

மேற்கு ஆசியாவின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு லெபனான். பெய்ரூட் என்பது இந்த நாட்டின் தலைநகராக உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்ட வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டு டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதல்கள் நடந்தது.

கடல் ஆமைகளின் பாதுகாவலர் மோனா கலீல்:

மோனா கலீல் (வயது 76) என்பவர் லெபனான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கடல் ஆமைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்பட்ட இவர் கடந்த கால் நூற்றாண்டாக ஒரு விருந்தினர் இல்லத்தை நடத்தி வந்ததோடு, லெபனானின் "டயர்" நகருக்கு அருகிலுள்ள ஒரு கடற்கரையில் ஒவ்வொரு கோடை காலத்திலும் முட்டையிடும், கடல் ஆமைகளை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க உழைத்து வந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, லெபனான் கடற்கரையில் முட்டையிட்டு பெருகிவரும் கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் பணியில் இருந்து வந்தார்.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் இறந்த மோனா கலீல்:

இந்த நிலையில் ஜூன் 4-ம் தேதி தெற்கு லெபனானில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மோனா கலீல் பெரும் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தொடர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT