உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது - நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கைப்பற்ற வெளிநாட்டு அமைப்புகள் முயல்வதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாததால் இந்த எண்ணிக்கைகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.

ஆட்சி அமைப்பதில் இழுபறி

இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம்

இந்த நிலையில், இஸ்ரேல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“அரபு கட்சிகள் இஸ்ரேல் தேர்தல்களைத் திருடிவிட்டார்கள்! அரபு கட்சிகளுக்கு ஆதரவாக சில வெளிநாட்டு அமைப்புகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நீதிபதி சோல்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இவர்களின் நோக்கம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தை வெளிநாட்டினர் கைப்பற்ற வேண்டும், இஸ்ரேலை இஸ்லாமிய மயமாக்கி, வலதுசாரி ஆட்சியை வீழ்த்துவதோடு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையை(IDF) அனைத்துத் தளங்களிலும், குறிப்பாக ஈரானில் தோல்வி அடைய வைக்க வேண்டும் என்பதே ஆகும்.

வெளிநாட்டு அமைப்புகள்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கைப்பற்ற வெளிநாட்டு அமைப்புகள் முயன்றது அம்பலமான பிறகு, எந்தவொரு சியோனிசக் கட்சியும் அரபு கட்சிகளுடன் ஒத்துழைக்கக் கூடாது என்பதும், பணத்திற்கு வாங்கப்பட்ட வாக்குகள் மூலம் நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றக் கூடாது என்பதும், இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒரு அரசாங்கத்தை அமைக்கக் கூடாது என்பதும் தெளிவாகிறது.

இந்த குற்றங்களை விசாரிக்க, ஷின் பெட்(Shin Bet) மற்றும் காவல்துறையிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT