உலக செய்திகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 8 பேர் பலி

தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

காசா சிட்டி,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசாவில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதேவேளை, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

8 பேர் பலி

இந்நிலையில், காசா முனை மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. காசாவின் கான் யூனிஸ், மத்திய காசா, தெற்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.