“ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” என்று பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அரசுமுறை பயணமாக பின்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “இரண்டு முக்கிய அம்சங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது, கிடைக்கும் இருப்பு மற்றும் விலை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகிறது. அந்த சூழலில் தான் ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியது. வழக்கமாக ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கியவர்கள் ஐரோப்பிய நாடுகள்தான். அவர்கள் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியதால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்தது. எனவே, நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா தனது முடிவுகளை எடுக்கிறது.
அதேபோல், இந்திய தயாரிப்பு ஆயுதங்களால் எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படுவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. இது தற்போது மட்டும் நடைபெறும் விஷயம் அல்ல; பல ஆண்டுகளாக தொடர்கிறது. மேலும், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்தியர்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை” என்று கூறினார்.