வாஷிங்டன்,
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதற்கிடையே, அமெரிக்க சட்டப்படி அந்நாட்டு அதிபர் ஒரு போரை பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 60 நாட்கள் மட்டுமே நடத்த முடியும். அதன்பிறகு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.இதையடுத்து, பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அதிபர் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த ஜனநாயகக் கட்சி தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதற்காக தீர்மானங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில், இந்த தீர்மானம் மீது செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் 50-48 என்ற கணக்கில் டிரம்புக்கு எதிரான இந்தக் கூட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் சபையிலேயே அவருக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களான ரேண்ட் பால், சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, பில் காசிடி ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளையில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜான் பெட்டர்மேன் எதிராக வாக்களித்தார்.
ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் மேற்கொண்ட 10-வது முயற்சியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஏற்கனவே இந்த மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கானல், டேவ் மெக்கார்மிக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் தீர்மானத்தை தடுக்கத் தேவையான முழுப் பெரும்பான்மை குடியரசுக் கட்சிக்கு கிடைக்காமல் போனது.
ஈரான் போரைத் தொடர்வதற்கான டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இது டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கிடையே, டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, “ஈரான் இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. அவர்கள் நமக்கு எதையும் வழங்கத் தயாராக உள்ளனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்காவையும் அதன் அதிபரான என்னையும் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
இத்தகைய சூழலில், அமெரிக்க செனட் சபை மிகவும் பொருத்தமற்ற நேரத்தில், அர்த்தமற்ற ‘போர் அதிகாரச் சட்ட’ வாக்கெடுப்பை நடத்துகிறது. இதன் மூலம் அவர்கள் எதிரிக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்துள்ளனர்.4 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். இந்த செனட் உறுப்பினர்கள் என் பணியை மேலும் கடினமாக்கியுள்ளனர். ஆனாலும் நான் எப்படியாவது அதைச் செய்து முடிப்பேன். ஏனென்றால் நான் எப்போதும் காரியத்தை முடித்துக் காட்டுபவன்” என்று தெரிவித்துள்ளார்.