உலக செய்திகள்

கடலில் 1.30 லட்சம் குட்டி ஆக்டோபஸ்களை விட்ட இத்தாலி: ஏன் தெரியுமா?

ஒரு கிலோ எடையுள்ள வளர்ந்த ஆக்டோபஸ், சரியான சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 4 நடுத்தர அளவிலான நீல நண்டுகளை உண்ணக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரோம்,

இத்தாலியில் கடல் வளங்களுக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நீல நண்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அட்ரியாடிக் கடலில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் குட்டி ஆக்டோபஸ்கள் விடப்பட்டுள்ளன. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பூர்வீகமாக காணப்படும் நீல நண்டுகள், மத்திய தரைக்கடல் பகுதியில் ஊடுருவிய இனமாக கருதப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, இத்தாலியின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடித் தொழில் மற்றும் சிப்பி வளர்ப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நீல நண்டுகள் மட்டி உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை அதிக அளவில் உண்பதுடன், மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால் பல மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆக்டோபஸ்கள் மூலம் கட்டுப்படுத்த திட்டம்

இந்த நிலையில், நீல நண்டுகளின் இயற்கையான எதிரியான ஆக்டோபஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், நண்டுகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இத்தாலி முயற்சி மேற்கொண்டுள்ளது. ‘ஆக்டோ-புளூ’ எனப்படும் இந்தத் திட்டத்தை போலோனியா பல்கலைக்கழகம் மற்றும் எமிலியா-ரோமாஞா பிராந்திய அரசு இணைந்து செயல்படுத்தி வருகின்றன. ஆய்வகங்களில் குஞ்சு பொரிக்கப்பட்ட ஆக்டோபஸ்கள், அட்ரியாடிக் கடலில் விடப்பட்டு வருகின்றன.

நீல நண்டுகளை உண்ணக்கூடும்

தற்போது விடப்பட்டுள்ளவை புதிதாக குஞ்சு பொரித்த ஆக்டோபஸ்கள் என்பதால், அவை சில மில்லிமீட்டர் அளவே உள்ளன. அவை வளர்ந்த பின்னர் நீல நண்டுகளை வேட்டையாடி உண்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். ஒரு கிலோ எடையுள்ள வளர்ந்த ஆக்டோபஸ், சரியான சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 4 நடுத்தர அளவிலான நீல நண்டுகளை உண்ணக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலனளிக்குமா?

இத்திட்டத்தின் மூலம் கடலில் இயற்கையான சமநிலையை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறிய ஆக்டோபஸ்களில் பெரும்பாலானவை வளர்ச்சியடையும் முன்பே உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை