ஸ்டாக்ஹோம்,
இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறை நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று, மருத்துவ துறைக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகளுக்காகவும், வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் அவருக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் ஹால்சனின் யோசனையில் உருவான ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம், தொலைதூர அண்டத்தில் தோன்றும் நியூட்ரினோக்களைக் கண்காணிக்கிறது. இந்த ஐஸ்கியூப் ஆய்வகத்தால் தொடர்ந்து பதிவு செய்யப்படும் நியூட்ரினோ தொடர்பான நிகழ்வுகள், உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் உருவாக்கப்படக்கூடிய வன்முறைச் சூழல்கள் பற்றிய தகவலை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கும். மேலும், இதுவரை அறியப்படாத அண்ட நிகழ்வுகளையும் வெளிப்படுத்தக்கூடும்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத்தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் பணம் (சுமார் 11.55 கோடி ரூபாய்) ஆகும். இந்த நோபல் பரிசு முறைப்படி வருகிற டிசம்பரில் வழங்கப்படும். நாளை வேதியியல் துறை, 8-ந்தேதி இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 9-ந்தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 12-ந்தேதியும் அறிவிக்கப்படுகிறது.