சுசு ஹேபாரு  
உலக செய்திகள்

ஜப்பான்: அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் 67 குட்டிக்கரணங்கள்-கின்னஸ் சாதனை படைத்த 9 வயது சிறுமி!

சிறிய வயதில் இச்சிறுமி நிகழ்த்தியுள்ள இந்த சாகசம் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

டோக்கியோ,

ஜப்பானைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் ஒரு நிமிடத்தில் 67 முறை குட்டிக்கரணம் அடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாககாமியைச் சேர்ந்தவர் சுசு ஹேபாரு (வயது 9). இவர், ஏரியல் ஹூப் எனப்படும் அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் சாகசம் செய்வதில் வல்லவர். இந்நிலையில், அவர் வசிக்கும் அதே பகுதியில் நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் ஒரு நிமிடத்தில் அதிகபட்ச குட்டிக்கரணங்கள் அடிக்கும் கின்னஸ் சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில், கண் இமைக்கும் நேரத்தில் சுழன்று ஒரு நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்களை அடித்து அவர் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சகோதரியே உத்வேகம்

இந்த சாதனை குறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சுசுவின் மூத்த சகோதரியே அவருக்கு முக்கிய உத்வேகமாக இருந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனது சகோதரி ஏரியல் ஹூப் பயிற்சி செய்வதைப் பார்த்து ஆர்வமடைந்த சுசு, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி நடைபெற்ற இந்த சாகச நிகழ்வை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், சுசு ஹேபாருவின் சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) தனது சாதனைப் புத்தகத்தில் இணைத்துள்ளது. சிறிய வயதில் இச்சிறுமி நிகழ்த்தியுள்ள இந்த சாகசம் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT