டோக்கியோ,
ஜப்பானில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவால் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் பலியாகினார்.
ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. அதே பகுதியில் ஷின்செய் தகுச்சி (வயது 29) என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி அன்று, 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்தார்.
அப்போது கீழே பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஹோரா இனாபா (வயது 23) என்ற இளம் பெண்ணின் மீது நேராக விழுந்தார். இதில் அந்த பெண் மற்றும் தகுச்சி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார், உடனடியாக அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மேல் மாடியில் இருந்து விழுந்த இளைஞர் எலும்பு முறிவுகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் தப்பினார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இது தற்கொலை முயற்சியா அல்லது தற்செயலாக கால் தவறி விழுந்தாரா? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.