பிரத்யேகத் தலையணை 
உலக செய்திகள்

ஜப்பான் பயணம்: ரூ. 40,000-க்கு பிரத்யேகத் தலையணை வாங்கிய இந்தியப் பெண்!

வழக்கமான பஞ்சுக்குப் பதிலாக, ஜப்பானின் புகழ்பெற்ற 'பிஞ்சோதான்' எனப்படும் கருப்பு நிறக் கரி குழாய் மணிகள் இதனுள் நிரப்பப்பட்டுள்ளன.

டோக்கியோ,

நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் கழுத்து வலி மற்றும் தூக்கமின்மைக்குத் தீர்வு காண, இந்தியப் பெண் ஒருவர் ஜப்பானின் பாரம்பரியக் கடையில் ரூ.40,000 செலவிட்டுத் தலையணை வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கழுத்து வலிக்கு தீர்வு தேடிய பயணம்

இந்தியாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் (சிஏ) விபன்தீப் கவுர். இவர் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்பட்ட கழுத்து வலி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு நிரந்தரத் தீர்வு காண விரும்பிய அவர், சமீபத்தில் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

400 ஆண்டுகள் பழமையான பாரம்பரியக் கடை

விபன்தீப் இந்த (நவம்பர்) மாத தொடக்கத்தில் டோக்கியோ நகரின் நிஹோன்பாஷி வணிகப் பகுதியில் அமைந்துள்ள 'நிஷிகாவா' என்ற 400 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற படுக்கை உபகரணக் கடைக்கு சென்றார். அங்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000 செலவிட்டு, தனக்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தலையணை ஒன்றை வாங்கியுள்ளார்.

தலையணையின் தனித்துவமான சிறப்பம்சங்கள்

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் தலை, கழுத்து மற்றும் உடல் தோரணையைத் துல்லியமாக அளவீடு செய்த பின்னரே இந்தத் தலையணை உருவாக்கப்படுகிறது. வழக்கமான பஞ்சுக்குப் பதிலாக, ஜப்பானின் புகழ்பெற்ற 'பிஞ்சோதான்' எனப்படும் கருப்பு நிறக் கரி குழாய் மணிகள் இதனுள் நிரப்பப்பட்டுள்ளன. இவை கழுத்திற்குச் சரியான ஆதரவையும், ஆழ்ந்த உறக்கத்தையும் தருகின்றன.

இணையத்தில் இருவேறு விவாதங்கள்

தனது இந்த அனுபவத்தை விபன்தீப் கவுர் கடந்த 4-ம் தேதி இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள், "ஒரு தலையணைக்கு ரூ. 40,000 செலவிடுவது ஆடம்பரம்" என ஒரு தரப்பினரும், "ஆரோக்கியமான தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் இது ஒரு சிறந்த முதலீடு" என மற்றொரு தரப்பினரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT