உலக செய்திகள்

ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய திடீர் தடை - என்ன காரணம்?

ஜப்பான் பள்ளிகளில் ஆண்-பெண் குழந்தைகள், மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

டோக்கியோ,

ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெர்காரி ஆன்லைன் நிறுவன சந்தை

ஜப்பானில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் மெர்காரி. இந்த நிறுவனம் மூலம் தனிப்பட்ட விற்பனையாளர்கள், புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

மெர்காரி ஆன்லைன் நிறுவன சந்தையில் எந்தப் பொருட்களும் இல்லை என்ற நிலை இல்லை. அந்த அளவுக்கு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நிறுவனம் திடீரென பள்ளி குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்திய நீச்சல் உடையை விற்பனை செய்யமாட்டோம், அதற்கு அனுமதி இல்லை என்று கடந்த (ஆகஸ்டு) 3-ந் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பயன்படுத்திய நீச்சல் உடை

ஜப்பான் பள்ளிகளில் ஆண்-பெண் குழந்தைகள், மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உடற்கல்வி பாடமாகவே அது கற்பிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அணியும் நீச்சல் உடையை ஜப்பானிய மொழியில் 'ஸ்கூல் மிசுகி' என்று அழைக்கிறார்கள். இந்த உடையானது, பொதுவாக கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் எளிமையாக வடிவமைக்கப்படுகின்றன.

சிறுவர்களுக்கு அரைக்கால் சட்டைகளும், சிறுமிகளுக்கு 'ஒன்-பீஸ்' நீச்சல் உடைகளும் அடங்கும். பெரும்பாலும் இதில் மாணவர் தங்கள் பெயரை எழுதுவதற்கான இடம் இருக்கும்; சில பள்ளிகளில் அந்தந்தப் பள்ளியின் சின்னமும் அச்சிடப்பட்டிருக்கும்.

மொத்தத்தில், பள்ளி நீச்சல் உடைகள் நாகரிகத்தைவிட பயன்பாட்டிற்கே முன்னுரிமை அளித்து வடிவமைக்கப்படுகின்றன. வேறு எந்த இடத்திலும் இந்த உடையை அணிவதை பார்க்க முடியாது.

விற்பனைக்கு திடீர் தடை - என்ன காரணம்?

இந்த ஆடைகளை எப்போதாவதுதான் அணிய வாய்ப்பு ஏற்படும் என்பதால், பல ஆடைகள் நல்ல நிலையிலேயே இருக்கும். அதற்குள் குழந்தைகளும் வளர்ந்துவிடுவதால் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சிக்கனமான குடும்பங்களை நடத்துபவர்கள், இதுபோன்ற பயன்படுத்திய ஆடைகளை விற்கவோ, வாங்கவோ இதுபோன்ற ஆன்லைன் சந்தைகளை நாடுகின்றனர்.

ஆனால், மெர்காரி ஆன்லைன் நிறுவனமோ, பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய திடீர் தடை விதித்துள்ளது. அதற்கான காரணத்தை இலைமறை காயாக சொல்லியுள்ள அந்த நிறுவனம், "ஜப்பானிய மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பள்ளி நீச்சல் உடைகள் மீது ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். பள்ளிச் சீருடைகளைச் சிலர் எந்த மாதிரியான தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில்தான் பள்ளி நீச்சல் உடைகளையும் பார்க்கிறார்கள் என கூறப்படுகிறது.

இத்தகைய பொருட்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு, அந்தப் பள்ளி நீச்சல் உடை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய ஈர்ப்பாக அமைகிறது. இதுபோன்ற பரிவர்த்தனைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தவறாக யாரும் விற்பனை செய்ய முயன்றால் அவர்களுடைய கணக்குகள் முடக்கப்படும்" என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.