வாஷிங்டன் டி.சி.
ஜாஸ் இசை கலைஞர் மற்றும் பிரபல இசையமைப்பாளரான சோன்னி ரோலின்ஸ் அவருடைய 95 வயதில் இன்று காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உட்ஸ்டாக் நகரில் வீட்டில் இருந்தபோது இன்று மதியம் அவர் மரணமடைந்து உள்ளார்.
இதனை அவருடைய குடும்பத்தினர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர். எனினும், இந்த மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. இசை துறையில் 1956-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக பல்வேறு ஜாஸ் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார்.
அவற்றில் 1957-ம் ஆண்டில் வெளியான வே அவுட் வெஸ்ட் என்ற ஆல்பம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ஏரெஜின், டாக்சி, ஒலியோ மற்றும் செயின்ட் தாமஸ் போன்ற பாடல்களும் அவர் இசையமைத்ததில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அவர் கிராமி வாழ்நாள் சாதனை விருது, கென்னடி சென்டர் ஹானர்ஸ் மற்றும் நேசனல் மெடல் ஆப் ஆர்ட்ஸ் போன்ற பெருமைகளை பெற்றுள்ளார்.
ரோலின்ஸ் அவருடைய மருமகன் கிளிப்டன் ஆண்டர்சன் மற்றும் அவருடைய மருமகள்கள் வால்லின் ஆண்டர்சன் மற்றும் கேப்ரியல்லே டிகுரோட் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.