செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 10 சதவீத ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று ஐபிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உலக அளவில் சுமார் 60 சதவீத வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாது. சமையல், கனரக வாகனங்களை ஓட்டுதல், விருந்தோம்பல் துறை சார்ந்த பணிகள் இதற்கு உதாரணங்களாகும். மீதமுள்ள 40 சதவீத வேலைகளில், பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த பணிகளில் பாதியை அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மேற்கொள்ளும். இதனால் சுமார் 10 சதவீத ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடலாம்.
அதேநேரத்தில், ஏஐ தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஏஐ ஏஜென்ட்களை உருவாக்குதல், அவற்றை பராமரித்தல், அவற்றின் செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற புதிய பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள்.இந்தியாவைப் பொறுத்தவரை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டால், பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்