உலக செய்திகள்

தான்சானியாவின் முதல் பெண் அதிபருக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

தான்சானியாவின் முதல் பெண் அதிபருக்கு, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 2015-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் ஜான் மாகுபுலி (வயது 61). இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இருதய நோய் காரணமாக கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி, பதவியில் இருக்கும்போது அதிபர் இறந்துவிட்டால் துணை அதிபர், அதிபர் பதவியை ஏற்பார். அதன்படி அந்த நாட்டின் துணை அதிபரான சமியா சுலுகு ஹசன், கடந்த 19 ஆம் தேதி தான்சானியாவின் 6-வது அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தான்சானியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

டார் எஸ் சலாம் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சமியா சுலுகு ஹசன், ஹிஜாப் ஆடையில் ஒரு கையில் குரானை வைத்துக்கொண்டு, நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பேன் என்று உறுதியளித்து பதவியேற்று கொண்டார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கமலா ஹாரிஸ், தான்சானியாவின் புதிய பெண் அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், தான்சானியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள

சமியா சுலுகு ஹசனுக்கு வாழ்த்துக்கள். நமது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.