உலக செய்திகள்

பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈராக் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் உடல்

மத வழக்கப்படி பல நாட்கள் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் தொடங்கியது.

டெஹ்ரான்,

ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலியானார்கள். 86 வயதில் கொல்லப்பட்ட அயதுல்லா காமேனி பல தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இறுதிச்சடங்கு போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இதுவரை நடைபெறாமல் இருந்துவந்தது. சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சற்று அமைதி நிலவி வருவதால் அயதுல்லாவின் இறுதிச்சடங்கு திட்டமிடப்பட்டது.

நபிகள் நாயகத்தின் நேரடி வாரிசு

அவர்களது மத வழக்கப்படி பல நாட்கள் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் தொடங்கியது. அங்குள்ள 'கிராண்ட் மொசல்லா' மசூதி வளாகத்தில் திறந்தவெளி மேடையில் அயதுல்லா அலி காமேனி உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே அவருடன் பலியான அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

காமேனியின் சவப்பெட்டியின் மீது கருப்பு நிறத் தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது, அவர் ஷியா பிரிவின் தலைவர் என்பதால் அவரை நபிகள் நாயகத்தின் நேரடி வாரிசு என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இந்த தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது.

2 கோடி பேர் அஞ்சலி

அயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்த நாடு முழுவதும் இருந்து 2 கோடி பேர் கலந்து கொண்டனர். இது இந்த நூற்றாண்டில் ஒரு தலைவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட உலகின் அதிக மக்கள் கலந்து கொண்டது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அதே போன்று உலகின் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாளை உடல் அடக்கம்

இந்நிலையில் ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஈராக் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு நகரங்களுக்குக் அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. துக்க நிகழ்வுக்காக அதிகாரிகள் சாலைகள் மற்றும் வான்வெளியை மூடி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அன்றாட நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

காமேனியின் பிறந்த இடமான ஈரானின் மஸ்சாத் நகரில் உள்ள இமாம் ரெசாவில் நாளை (9-ந்தேதி வியாழக்கிழமை) உடல் அடக்கம் செய்யப்படுவதோடு அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நிறைவடைகிறது.