மழலையர் பள்ளியில் சிங்கம்- புலிக்குட்டிகள் 
உலக செய்திகள்

சீனாவில் சிங்கம், புலிக் குட்டிகளுக்காக "மழலையர் பள்ளி" துவக்கம்: வைரலாகும் வீடியோ

கூண்டுகளுக்குள் பிறப்பதால் குட்டிகளுக்கு வேட்டையாடும் குணம் குறைந்துவிடுகிறது.

பெய்ஜிங்,

சீன நாட்டின் ஒரு பூங்காவில், பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு மழலையர் பள்ளி

தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள லெஹே லெடு பிரபல வனவிலங்கு பூங்காவில், பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்காக பிரத்யேகமாக "மழலையர் பள்ளி" இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. மனித குழந்தைகளைப் போல விலங்குக் குட்டிகளும் ஒழுக்கத்துடனும், ஆரோக்கியத்துடனும் வளர வேண்டும் என்ற நோக்கில் இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தள்ளுவண்டியில் வந்த மழலையர்கள்

பள்ளியின் முதல் நாளில், விலங்கு பராமரிப்பாளர்கள் சிங்கக் குட்டிகளையும், புலிக் குட்டிகளையும் பிரத்யேக தள்ளுவண்டிகளில் வைத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர், மர நிழலில் வரிசையாக அமர வைக்கப்பட்ட குட்டிகளுக்கு, மனிதக் குழந்தைகளுக்கு செய்வது போலவே "பள்ளியின் முதல் நாள்" புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. இந்த அழகிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.

பள்ளியின் முக்கிய நோக்கங்கள்

கூண்டுகளுக்குள் பிறப்பதால் குட்டிகளுக்கு வேட்டையாடும் குணம் குறைந்துவிடுகிறது. இந்த விளையாட்டுக் கூடம் மூலம் அவற்றின் தப்பிப்பிழைக்கும் திறனை வளர்க்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சில தாய் விலங்குகள் தங்களது குட்டிகளைப் பராமரிக்காமல் கைவிட்டுவிடுகின்றன. அத்தகைய குட்டிகளைப் பராமரிப்பாளர்கள் தத்தெடுத்து இங்கு தாயன்போடு வளர்க்கிறார்கள். சிங்கம் மற்றும் புலி ஆகிய இரு வேறு இனங்களைச் சேர்ந்த குட்டிகளும் சிறு வயது முதலே ஒன்றோடு ஒன்று இணைந்து பழகவும், ஓடி விளையாடி உடல் வலிமை பெறவும் இப்பள்ளி உதவுகிறது.

24 மணி நேர கண்காணிப்பு

மழலையர் பள்ளியில் உள்ள குட்டிகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படுகிறது. அவற்றுக்கு தேவையான ஊட்டச்சத்து பால் மற்றும் பிரெஷ்ஷான இறைச்சி தினசரி உணவாக அளிக்கப்படுகிறது. ஓரளவிற்கு வளர்ந்த பிறகு, இவை பூங்காவின் பெரிய விலங்குகள் வாழும் பகுதிக்கு மாற்றப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவின் சோங்கிங், பெய்ஜிங் மற்றும் ஷாங்சி மாகாண வனவிலங்கு பூங்காக்களில் இத்தகைய பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT