உலக செய்திகள்

இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

இந்தோனோசியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜகார்தா,

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம், 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதனால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜாவா கடல்பரப்பில் விமானம் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் தெளிவாக இன்னும் வெளியிடப்படவில்லை.

விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்களில் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளதாக இந்தோனேசியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.