உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...

சோனியாவின் உடல் ஓர் ஆழமற்ற குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாஷிங்டன்,

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

இணையதளம்

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த டுவைன் ஹால் என்ற நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம், சோனியாவை ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.

4,000 டாலர்கள்

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லண்டனிலிருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சோனியா சென்றுள்ளார்.

கடைசி நிமிடத்தில் மாறிய மனம்

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் சோனியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். அப்போது சோனியாவுக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, சோனியா தனது தோழி ஒருவருக்கு, "அவன் என்னை விடுவிக்க மறுக்கிறான், இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை, நான் பெரிய தவறு செய்துவிட்டேன்" என்று ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.

குழியில் புதைக்கப்பட்ட சடலம்

அடுத்த சில நாட்களில் சோனியா இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், சோனியா 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிரடி கைது

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான கொலையாளி டுவைனை அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.