Image courtesy : Reuters 
உலக செய்திகள்

குரேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7 பேர் பலி

குரேஷியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் பலியானார்கள்.

நியூயார்க்

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்டை நாடுகளான போஸ்னியா மற்றும் செர்பியாவில் மட்டுமல்லாது இத்தாலி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே அளவிலான நிலநடுக்கம் ஒன்று குரேஷிய தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880ல் நிகழ்ந்துள்ளது.

பெட்ரீனியா எனுமிடத்தில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.அதன் அருகே உள்ள க்ளினா எனும் நகரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்ட்ரே பிலென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் குரேஷியாவின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பெட்ரீனியா நகரில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டனர்.

பாதி நகரம் அழிந்துவிட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் பெட்ரீனியா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். இந்த நகரத்தில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர்.