உலக செய்திகள்

மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி

இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

புடாபெஸ்ட்,

ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% வாக்குகளை பெற்றது.

ஆளும் விக்டர் அர்பன் பிடெஸ் கட்சி 37.8% வாக்குகளுடன் 55 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்த வெற்றியின் முலம் ஹங்கேரியின் நீண்டகால பிரதமர் விக்டர் ஆர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி இந்த 2026 நாடாளுமன்ற தேர்தலில் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்க்கும் மற்றும் ரஷிய அதிபர் புடினுக்கும் விக்டர் அர்பன் ஒரு நல்ல நண்பர்.தேர்தலுக்கு சில நாளுக்கு முன் வான்ஸை ஹங்கேரிக்கு அனுப்பி அதிபர் டிரம்ப் பிரதமர் ஓர்பனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

2010 முதல் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த விக்டர் அர்பன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு எதிர்க்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி ஹங்கேரியை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமாக்கும் என்றும், ஜனநாயகம் வலுப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா உள்ளிட்டோர் பீட்டர் மக்யாருக்குத் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.