வாஷிங்டன்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர்.
அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு சென்றனர். 6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.
எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என கூறிய வான்ஸ் தன்னுடைய குழுவினருடன் கடந்த ஞாயிற்று கிழமை நாடு திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் போர் துறைக்கான மந்திரி பீட் ஹெக்சேத் இன்று கூறும்போது, உலக நன்மைக்காகவும், ஈரானிய மக்களின் நன்மைக்காகவும், புத்திசாலித்தனத்துடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ளும் வரை, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடியும் நீடிக்கும்.
ஈரான், அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார். இந்நிலையில், இன்று 3-வது நாளாக ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டு உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த வாரத்தில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற கூடும் என்று பாகிஸ்தானிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி கூறியுள்ளார். இரு தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், இந்த தகவல் வெளியானது.