உலக செய்திகள்

மாலி: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புத்துறை மந்திரி பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி.

பமாகோ,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, மாலியின் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். தலைநகர் பமாகோ, கிடல் , கதி, கொவா உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா, ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தினர். ராணுவ தளங்களை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஆங்காங்கே துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், மாலி நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியாக ஜெனரல் சடியொ கேமரா செயல்பட்டு வந்தார். அவர் தலைநகர் பமாகோ அருகே உள்ள கதி நகரில் வசித்து வந்தார். பயங்கரவாதிகள் நேற்று கூட்டாக இணைந்து கதி நகரில் உள்ள பாதுகாப்புத்துறை மந்திரியின் வீட்டில் சரமாரி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சடியொ கேமரா உயிரிழந்தார். இந்த சம்பவம் மாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, அதிபர் அசிமி கொமிடா பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக மாலி அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் பமாகோவை கைப்பற்ற பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் மாலியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.