உலக செய்திகள்

இத்தாலி: நடைபாதையில் சென்றவர்கள் மீது காரை மோதி தாக்குதல் - 8 பேர் படுகாயம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோம்,

இத்தாலி நாட்டின் மொடினா நகரம் பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இந்நிலையில், மொடினா நகரில் பிரபல கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மொடினா நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே உள்ள முக்கிய சாலையோர நடைபாதையில் பொதுமக்கள் நடந்து என்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வேகமாக வந்த கார் நடைபாதையில் சென்றவர்கள் மீது வேகமாக மோதியது. நடந்து சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது காரை மீண்டும் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

காரை மோதியப்பின் அதில் இருந்து இறங்கிய நபர் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டும் தாக்குதல் நடத்த முயன்றார். இந்த தாக்குதலில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 4 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தாக்குதல் நடத்திய 30 வயதான இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மொராக்கோ நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இளைஞரின் பெயர் உள்ளிட விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, தாக்குதலில் படுகாயமடைந்த 8 பேரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.