பிரேசிலியா,
பிரேசிலை சேர்ந்த டியோகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் செய்து 2020 செப்டம்பரில் ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இருப்பினும், இந்த ஜோடி வேறுபாடுகள் மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் இருவரும் பிரிந்தனர்.
இருவரும் பிரிந்ததை அடுத்து உடனே, திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று குடும்பத்தினர் கூறி இருக்கின்றனர். இருப்பினும், இதற்கு மணமகன் டியோகா ஒப்புக் கொள்ளவில்லை. மணமகளே இல்லை என்றாலும் கூட திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என அவர் உறுதியாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் குறித்த தேதியில், தன்னைத் தானே திருமணம் செய்ததுடன் இதனை டியாகோ ராபெலோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்தேன். மிகவும் சோகமான இந்த நாளை நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றி இருக்கின்றேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என்று தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு பலரும் தன்னம்பிக்கையுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.