Image Credits: Ai 
உலக செய்திகள்

இளம் வயதினரை காக்க களமிறங்கிய மெட்டா... புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

மெட்டா நிறுவனத்தின் இந்த புதிய பாதுகாப்பு அம்சம் பெற்றோர்களுக்கு நிம்மதி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

டீன் ஏஜ் வயதினர் மெட்டா ஏ.ஐ.-யுடன் உரையாடும்போது, தற்கொலை அல்லது உயிருக்கு ஆபத்தான மனநிலை தொடர்பான தகவல்களை பகிர்ந்தால், அதை ஏ.ஐ. கண்டறிந்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் முயற்சியாக, மெட்டா புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, டீன் ஏஜ் வயதினர் மெட்டா ஏ.ஐ.-யுடன் உரையாடும்போது, தற்கொலை அல்லது உயிருக்கு ஆபத்தான மனநிலை தொடர்பான தகவல்களை பகிர்ந்தால், அதை ஏ.ஐ. கண்டறிந்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பும்.

ஆம்..! இதுவரை, இத்தகைய சூழ்நிலைகளில் மெட்டா ஏ.ஐ. உதவி எண்கள், மனநல ஆலோசகர்கள் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் பேசுமாறு மட்டுமே அறிவுறுத்தி வந்தது. ஆனால், புதிய வசதியின் மூலம் பெற்றோருக்கும் நேரடியாக தகவல் அனுப்பப்படும். இதனால், ஆபத்தான சூழ்நிலைகளை ஆரம்பத்திலேயே கவனித்து தேவையான உதவியை வழங்க முடியும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஒரு நபரின் உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாக ஏ.ஐ. கருதினால், அவசரகால உதவி அமைப்புகளுக்கும் (எமெர்ஜென்சி சர்வீசஸ்) தகவல் தெரிவிக்கும் வசதியையும் மெட்டா உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், இதுபோன்ற 19 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சம்பவங்களில் அவசர உதவி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும், டீன் ஏஜ் வயதினரின் கணக்குகளில் 13 பிளஸ்' என்ற பாது காப்பு அமைப்பு இயல்பாகவே செயல்படுத்தப்படுகிறது. இதனால், வயதுக்கு பொருத்தமற்ற அல்லது மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கேள்விகளுக்கு மெட்டா ஏ.ஐ. பதில் அளிக்காது. பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற பதில்களை மட்டுமே வழங்கும்.தற்போது இந்த வசதி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஆண்டுக்குள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மெட்டா அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த புதிய பாதுகாப்பு அம்சம் பெற்றோர்களுக்கு நிம்மதி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.