உலக செய்திகள்

நூதன மோசடி; கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ஆசி பெறுவதுபோல் நகை கொள்ளை - வைரலான வீடியோ

அந்த பெண் குனிந்து, மூதாட்டியின் கால்களில் விழும் மற்றும் அவரை கட்டியணைக்கும் காட்சிகள் இருந்தன.

டொரண்டோ

கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ஆசி பெறுவதுபோல் பெண் ஒருவர் நகைகளை திருடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் நடைப்பயிற்சி சென்றபோது, சொகுசு காரில் இருந்து இறங்கிய 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அவரை நெருங்கினார்.

நெக்லஸ், வளையல்

அவரிடம் ஆசி பெறுவது போன்று காலில் விழுந்து நடித்துள்ளார். அவரை கட்டியணைத்ததுடன், பரிசளிப்பதுபோல் சங்கிலியை கழுத்தில் அணிவித்து, வளையல்களையும் மாட்டிவிட்டார்.

ஆனால், உண்மையில், இந்திய பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க நெக்லசையும், வளையல்களையும் கழற்றி கையோடு கொண்டு சென்றுள்ளார். வந்த காரிலேயே அவர் ஏறி சென்றார். பின்னர்தான் ரூ.19 லட்சம் மதிப்புள்ள 110 கிராம் தங்க நகைகளை அவர் நைசாக பறித்து சென்றது தெரியவந்தது.

வைரலான வீடியோ

இதனால் மூதாட்டி அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விட்டார் என்று அவருடைய மகன் ராகவேந்திர குமார் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை சமீபத்தில் கனடா போலீசார் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண் குனிந்து, மூதாட்டியின் கால்களில் விழும் மற்றும் அவரை கட்டியணைக்கும் காட்சிகள் இருந்தன.

ராகவேந்திராவின் தந்தை பொற்கொல்லர் என்ற முறையில், அவரே இந்த நகையை வடிவமைத்து மனைவியிடம் பரிசாக அளித்துள்ளார். அதனால், ராகவேந்திராவின் தாய், அவற்றை பாதுகாப்பாக வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், நகை திருடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் அவர் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகிறார்.

SCROLL FOR NEXT