ஜெருசலேம்,
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலின் பிரபல ‘சேனல் 14’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தி வருமாறு:-
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். எனினும், அமெரிக்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், இதுவரை பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மொஜ்தபா கமேனி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, "மொஜ்தபா கமேனி விரைவில் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் தகவல்.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், "தற்போதைய சூழலில் உச்ச தலைவர் மொஜ்தபாவுடன் நேரடி தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். அதிபரின் இந்த வாக்குமூலம் இஸ்ரேலிய ஊடகத்தின் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்