உலக செய்திகள்

100-க்கும் மேற்பட்ட உளவாளிகள் கைது; அமெரிக்கா-இஸ்ரேலுக்கு தோல்வி... ஈரான் அறிவிப்பு

ஈரானுக்கு வெளியே உள்ள பயங்கரவாத ஊடகங்களுக்கு வீடியோக்களை அனுப்பிய 21 பேரை கைது செய்திருக்கிறோம் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது.

தெஹ்ரான்

அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக உளவு பார்த்த 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி ஈரானின் அரசு அதிகாரிகள் கூறும்போது, ஈரானுக்கு எதிரான முறையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறினர். அந்த இரு நாடுகளுடன் இணைந்து கொண்டு அவர்களின் நலன்களுக்காக செயல்பட்டு உள்ளனர் என்றும் அதனால் அவர்களை தேச துரோகிகள் என்றும் ஈரான் அறிவித்து உள்ளது.

ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் செயல்பட்டு வந்த 111 அமெரிக்க ஆதரவு பெற்ற மன்னராட்சிக்கு ஆதரவான நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து நிறைய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஈரானுக்கு வெளியே உள்ள பயங்கரவாத ஊடகங்களுக்கு வீடியோக்களை அனுப்பிய 21 பேரை கைது செய்திருக்கிறோம் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது.

சந்தேகத்திற்குரிய நபர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்கள் என்றால், அவர்களை பற்றி தகவலளிக்க மக்களை அரசு கேட்டு கொண்டுள்ளது. ஈரான் அரசு ஒட்டுமொத்த அளவில், 3 வாரத்திற்கும் மேலாக இணையதள சேவையை முடக்கியதில் 9.2 கோடி பேர் இணையதள வசதியின்றி உள்ளனர். இதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தோல்வி ஏற்பட்டு உள்ளது என ஈரான் அறிவித்துள்ளது.