காத்மாண்டு,
நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் சுமார் 300 இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளம் நேபாளத்தின் மூன்று மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரில் சுமார் 300 இந்தியர்களும் அடங்குவர் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் இன்று ( வியாழக்கிழமை) கூறினார்.
மேலும், ராசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன; பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். பேரிடரின் முழு அளவை நாங்கள் இன்னும் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) மூன்று மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போட்டேகோஷி (Bhotekoshi) நதி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பனிச்சரிவு காரணமாக போட்டேகோஷி நதியின் கிளை நதியான லெண்டேவின் (Lhende) நீரோட்டம் தடைபட்டதால் இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது; இது முதலில் சீனாவுடனான நேபாள எல்லையான ராசுவாகதிக்கு (Rasuwagadhi) அருகிலுள்ள டிமுரே (Timure) பகுதியைத் தாக்கியது.
காணாமல் போன சுமார் 500 பேரில் குறைந்தது 133 இந்தியர்களும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRIs) அடங்குவர் என்று தகவல் வெளியானது. காணாமல் போன இந்தியர்களில் குறைந்தது 50 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றவர்கள் ஆவர்.
திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்காக, காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசரக்கால எண்களை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது.
இதுதொடர்பான எக்ஸ் ' (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், +977 985 131 6807 அல்லது +977 970 910 7500 ஆகிய எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களை விரைவாக மீட்கவும் நிவாரணம் வழங்கவும் நேபாள அரசு அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மற்றொரு 'எக்ஸ்' பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது;
மேலும், நேபாள அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலா வாரியமும் உதவிக்கான கட்டணமில்லா அவசர எண் 1234, ஹாட்லைன் எண் 1144 மற்றும் சுற்றுலாப் பயணிகள் காவல் பிரிவு எண் 9851289445 உள்ளிட்ட எண்களை வெளியிட்டது.
பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகமும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடர்புகொள்ளக்கூடிய 0086 185 1428 4905 என்ற உதவி எண் ஒன்றை வெளியிட்டது.