உலக செய்திகள்

ஈரானில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் படுகொலை; இஸ்ரேல் தகவல்

இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தலை அழிக்கும் இலக்குடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியது. இந்த வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து நடத்திய தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தகவல் தெரிவித்து உள்ளது. இது வரலாற்று தாக்குதல் என்றும் ராணுவ உளவு தகவலின் அடிப்படையில் இது சாத்தியம் என்றும் தெரிவித்து உள்ளது.

இதில், 2 தனித்தனியான இடங்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதலில் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த இஸ்ரேல், அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

இந்த பட்டியலில், ஈரானின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அப்தூரகீம் மவுசவியும் ஒருவர் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் மவுசவி மற்றும் பிற மூத்த ஈரானிய பாதுகாப்பு பிரிவு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என ஈரானின் அரசு ஊடகமும் தெரிவித்து உள்ளது.

ஈரானின் வான் பாதுகாப்பு சாதனங்களை மேற்கு மற்றும் மத்திய ஈரான் பகுதியில் தகர்த்து விட்டோம் என்றும், ஈரானின் வான் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறோம் என்றும் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தலை அழிக்கும் இலக்குடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.