உலக செய்திகள்

“தேவதூதர் போன்று இனிமையானவர் இந்திய பிரதமர் மோடி..” - ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப் புகழாரம்

கொள்கையில் மிகவும் உறுதியானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப் தெரிவித்தார்.

பாரீஸ்,

ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு பிரான்சின் இவியான் லெஸ்பைன்ஸ் நகரில் நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றன.

அந்தவகையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டுக்கு இடையே உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்தார். நேற்று மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

இரு நாடுகளுக்கு இடையே சமீப காலத்தில் நிலவி வரும் உறவுச்சிக்கலுக்கு மத்தியில், அதை சீர்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது.

மேலும் ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் சமீபத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையும், அதில் 3 மாலுமிகள் உயிரிழந்ததையும் பிரதமர் மோடி எடுத்துரைத்து, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

ஹார்முஸ் நீரிணை திறப்பு

உலகப் பொருளாதாரத்துக்கு ஹார்முஸ் நீரிணையை திறந்து வைத்திருப்பது இன்றியமையாதது என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாம் இதில் இணைந்து செயல்பட வேண்டும்.

ஏராளமான இந்திய மாலுமிகள் கடல்வழி வணிக துறையில் பணியாற்றி வருகின்றனர். வணிகத்தைப்போலவே அவர்களது பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மோடியை புகழ்ந்த டிரம்ப்

டிரம்ப் பேசும்போது, மோடியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார்.

மேலும் அவர், 'பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர் என்று மக்கள் சொல்கிறார்கள். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகான மனிதர். இந்திய பிரதமர் மோடி தேவதூதர் போன்று இனிமையான நபர். ஆனால் உண்மையில், அவர் ஒரு கடுமையானவர். கொள்கையில் மிகவும் உறுதியானவர். அவர் சமரசம் பேசுவதில் திறமையானவர். அவர் இந்திய மக்களை நேசிக்கிறார், அப்படியே அமெரிக்காவையும் நேசிக்கிறார்' என்று புகழ்ந்துரைத்தார்.

இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அவர் பேசும் போது. 'நானும் அதைப் பற்றி கேள்விப்பட்டேன், அது ஒரு கடினமானது. அதில் சந்தேகமே இல்லை' என்று தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா

மேற்கு ஆசியா விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருந்ததா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'அவர் (பிரதமர் மோடி) தலைவராக இருக்கும் வரை. எல்லாவற்றிலும் இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்கப்போகிறது' என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தை திறனை புகழ்ந்துரைத்த டிரம்ப், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜி7 இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிர்பாராத விதமாக பாராட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு சமூகவலைதளங்களில் எதிர்வினைகளை தூண்டியுள்ளது.