வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகளில் கடும் கெடுபிடி காட்டி வருகிறார். இதனால், இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் விசா நீட்டிப்பு, கிரீன் கார்டு பெறுவது போன்ற நடைமுறைகளில் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், கிரீன் கார்டு விதிகளில் புதிய மாற்றத்தை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் நிரந்தர தங்கியிருக்க வழி வகை செய்யும் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
புதிய விதிகளின் படி, கிரீன் கார்டு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப செயல்முறை நடைபெறும் காலத்தில் அமெரிக்காவில் தங்காமல், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை வாரியம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு இந்தியர்கள் உள்பட கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிரீன் கார்டு என்பது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை போன்றதாகவும். இந்த கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருக்கலாம். கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவின் எந்த பகுதியிலும் வசிக்கலாம், பெரும்பாலான நிறுவனங்களில் வேலை செய்யலாம், அமெரிக்காவில் கல்வி பயிலலாம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யலாம்.