ஓரிகான்
அமெரிக்காவில் மகனுக்கு துப்பாக்கியை பிறந்த நாள் பரிசாக தாய் கொடுத்ததில் கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் பெந்த் நகரில் சில்வர் ரெயில் என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 16 வயது மாணவன் ஒருவன் திடீரென்று பள்ளியின் வகுப்பறையில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆசிரியர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த மாணவன் கிரிப்பின் ஜே. ஜான்-2 என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருடைய தாய் ஷான்தாய் நிக்கர்சன், கடந்த ஆகஸ்டில் மேவரிக் ரக துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார்.
அதனை தன்னுடைய மகனுக்கு அன்பு பரிசாக சமீபத்தில் கொடுத்துள்ளார். துப்பாக்கியை வாங்கிய அந்த சிறுவன் முதலில் சாலையில் சென்ற லாரியை நோக்கி சுட்டுள்ளார். அதனை அந்த வழியே சென்ற கெய்லப் கியாமன்கோ (வயது 36) என்பவர் பார்த்துள்ளார்.
இதன் பின்னர் பள்ளிக்குள் புகுந்து சுட்டுள்ளார். இதில், 5, 8 மற்றும் 11 வயதுடைய 3 மாணவர்கள் மற்றும் மேகன் லாம்பெர்ட் (வயது 25) என்ற ஆசிரியர் என 4 பேர் பலியானார்கள். 7 வயது சிறுமி, 54 வயது ஆசிரியர் ஆகியோர் காயமடைந்தனர்.
சிறுவன் கிரிப்பின் சிறப்பு சிகிச்சை பெறும் மாணவன் என கூறப்படுகிறது. கிரிப்பினை, பின்தொடர்ந்து வந்த கெய்லப், அவரை சுட்டு கொன்றார். கெய்லப்பின் 2 மகள்களும் இதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
பிறந்த நாள் பரிசாக மகனுக்கு, துப்பாக்கியை தாய் கொடுத்ததில் அடுத்தடுத்து நடந்த இந்த கொடூரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.