உலக செய்திகள்

எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஈர்ப்பு இருந்தது- டிரம்ப்

பிரிட்டன் மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் நேற்று வரவேற்றனர்.

இந்த சந்திப்பு, அமெரிக்கா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோ சனை நடத்தினர். ஈரானுக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் இங்கிலாந்து மீதான டிரம்பின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

முன்னதாக வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் குடும்பத்தினருக்கான வரவேற்பு விழாவின் போது பேசிய டிரம்ப் "எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. சார்லஸ் இளமை பருவத்தில் இருந்தபோது, அவர் மிகவும் அழகாக இருப்பதாக என் தாயார் சொன்னது நினைவில் இருக்கிறது" என்று கூறினார். டிரம்பின் இந்த பேச்சு அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது