உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் கசிவு எச்சரிக்கையால் பரபரப்பு: விளக்கம் அளித்த நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி பகுதியில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.

வாஷிங்டன்,

நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பிற நாட்டின் விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. இதில் மனிதர்கள் சுவாசிப்பதற்காக பூமியைப் போன்றே ஆக்சிஜன் கலந்த காற்று நிரப்பப்பட்டிருக்கும்.

நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி பகுதியில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனை பழுதுபார்க்கும் முயற்சியில் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஈடுபட்டது.

அப்போது அமெரிக்காவின் ஆராய்ச்சி நிலையத்தை சேதப்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கு பணிபுரிந்து வரும் 5 அமெரிக்க விண்வெளி வீரர்களை உடனடியாக வெளியேறி விண்கலத்துக்கு செல்லுமாறும் அவர்களை உடனடியாக பூமிக்கு திரும்ப அழைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாசா மேற்கொண்டது.

இதற்கிடையே ரஷிய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தங்களது தன்னிச்சையான பழுதுபார்க்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து, 5 அமெரிக்க விண்வெளி வீரர்களை வெளியேற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நாசா அறிவித்தது.

முன்னதாக விண்வெளி நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த இந்த காற்று கசிவின் அளவு, ஒரு நாளைக்கு ஒரு பவுண்ட் என்ற அளவில் இருந்து 2 பவுண்டாக உயர்ந்தது. இதையடுத்து, விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நாசாவின் 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள் 4 பேர் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர் என மொத்தம் 5 பேர், அவசர தேவைக்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ஸ்பேஸ்-எக்ஸ்'-இன் 'க்ரூ டிராகன்' விண்கலத்துக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டனர். அசம்பாவிதம் தவிர்க்க, வீரர்கள் தங்களின் விண்வெளி உடைகளை அணிந்து தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

விண்வெளி வீரர்கள்

சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு, கசிவு விகிதத்தை ஆய்வு செய்த நாசா, விண்வெளி வீரர்கள் மீண்டும் விண்வெளி நிலையத்துக்கு திரும்ப அனுமதியளித்தது.

விண்வெளி நிலையத்தின் 27 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை வீரர்கள் யாரும் முழுமையாக வெளியேற்றப்பட்டதில்லை என்றாலும், சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவ்வப்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.