உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு உதவி செய்ய மறுத்த நேட்டோ... டிரம்ப் அதிருப்தி

அமெரிக்காவுக்கு உதவாத நாடுகளை மறக்கமாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியிருப்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். 7 நாடுகளை கேட்டுக்கொண்டதாக அவர் கூறினாலும் எந்தெந்த நாடுகள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

எனினும் சீனா, பிரான்ஸ், ஜப் பான், தென்கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஹார்முஸ் நீரிணைக்கு கப்பல் அனுப்பாமல் பல நாடுகள் கைவிரித்து விட்டன. அந்தவகையில் இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அடுத்தடுத்து மறுத்து வருகின்றன. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு உதவாத நாடுகளை மறக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் உதவி செய்ய நேட்டோ நாடுகள் மறுத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர்களின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றுக்கொண்டு, அமெரிக்காவுக்குத் தேவைப்படும்போது அந்நாடுகள் ஒதுங்கிக்கொள்வதே வழக்கம் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா ஏற்கனவே மிகப்பெரிய ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதால், இனி தங்களுக்கு நேட்டோ நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா என யாருடைய உதவியும் தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.