உலக செய்திகள்

இங்கிலாந்து இளைஞர்களை பாதித்த ‘நீட்’; காரணிகள் என்ன? அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

12 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

லண்டன்

நம் நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்தருந்த நிலையில், ஒரு சிலரின் முறைகேடான செயல்களால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒருபுறம் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டையும் ‘நீட்’ விட்டு வைக்கவில்லை. இதனால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த நீட் நம் நாட்டுடன் தொடர்புடையது அல்ல. இதுதொடர்பாக அந்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி, இங்கிலாந்து நாட்டில் 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சிக்கான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர்.

12 ஆண்டுகளில்

அப்படி ‘வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இல்லாமல்’ என்ற விசயங்களை குறிக்க ஆங்கிலத்தில் நீட் (Neet) என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, நாட்டில் இந்த வகையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இது பொருளாதார நெருக்கடியை விட அதிகம் பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்று ஆய்வு நடத்திய ஆலன் மில்பர்ன் தெரிவித்து உள்ளார். இதனால், ஆண்டுக்கு 16 லட்சத்து 8 ஆயிரத்து 581 கோடி (12,500 கோடி பவுண்டு) இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரான ஆலன் மில்பர்ன் இதுதொடர்பான நிலைமையை மறுஆய்வு செய்துள்ளார். அவர் கூறும்போது, இளைஞர்கள் ஒரு தீவிர புயலில் சிக்கி கொண்டனர் என்றே கூறலாம். அது பொருளாதார நெருக்கடியை விட கடினம் வாய்ந்தது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 6-ல் ஒருவர் இந்த நீட் பாதிப்புக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கிறார்.

இதுபற்றி சிலர் தங்களுடைய வேதனையான அனுபவங்களையும் வெளியிட்டு உள்ளனர். இளம்பெண் ஹாலி (வயது 24) கூறும்போது, ஒரு வாரத்திற்கு 50 வேலைகளுக்கும் மேலாக நான் விண்ணப்பித்தேன். ஆனால், இ-மெயில் நிராகரிக்கப்பட்டு விட்டது என்ற பதில் வந்தாலே நான் அதிர்ஷ்டம் வாய்ந்தவள் என நினைத்து கொள்வேன் என்கிறார்.

பணி அனுபவ வாய்ப்பு

இதேபோன்று மற்றொரு இளம்பெண் கூறும்போது, நான் குறைந்த சம்பளத்தில் உள்ள வேலையில் சேர்ந்து சிக்கி கொண்டேன். அதனால், சொந்த கிராமத்திற்கே செல்லலாம் என நினைக்கிறேன் என்று கூறினார்.

ஜெஸ் என்ற 22 வயது சட்டப்படிப்பு முடித்த மாணவி கூறும்போது, எனக்கு படிக்கும்போதே, அதனுடன் தொடர்புடைய பணி அனுபவ வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்ததுடன், தற்போதுள்ள நடைமுறை சூழல்கள் பணக்கார மாணவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது என்றும் கூறினார்.

400-க்கும் மேற்பட்ட வேலைகள்

போதிய வாய்ப்புகள் கிடைக்காதது ஒரு குறையாக உள்ளது. அதற்கான நிதியுதவியும் இல்லை என மற்றொரு மாணவர் கூறினார். லூக் (வயது 23) என்பவர் கூறும்போது, 400-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். ஒரே ஒரு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அதுவும் தூய்மை பணியாளருக்கானது. அந்த வேலையும் தனக்கு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பான காரணங்கள் பற்றி பார்க்கும்போது, இளைஞர்கள் பலர் மனநல சவால்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். வேலை வழங்கும் முதலாளிகளோ, அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வளங்கள் நம்மிடம் உள்ளன என்று நினைத்து ஆதரவு தருவதே இல்லை என அறிக்கை கூறுகிறது.

இங்கிலாந்து பிரதமர்

அதனால், அனுபவமற்ற மற்றும் சவாலான புதுமுகங்களின் சுமையை நீக்கும் வகையில் மற்றும் முதலாளிகளின் முன் உள்ள இந்த இடர்களை எல்லாம் களையும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மைக்கான ஆராய்ச்சி தலைவர் ராமையா கூறுகிறார்.

இந்த அறிக்கை பற்றி இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறும்போது, இது உண்மையில் வருத்தம் தர கூடிய விசயம். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றார். இளைஞர் ஒருவர் 18 மாதங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கிறார் என்றால், அவருக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வேலை தருவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்று கூறினார்.

3 மடங்காக உள்ளது

ஓய்வு வயது அதிகரிப்பு ஒரு காரணியாக இருக்கலாம். வேலைவாய்ப்புகள், பயிற்சி வேலைவாய்ப்புகள் குறைந்து போனது உள்ளிட்டவை இதற்கான காரணிகளாக இருக்க கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.

ஹாலந்து, அயர்லாந்து போன்ற நாடுகளை காட்டிலும் இங்கிலாந்தில் வேலை, கல்வி இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உள்ளது என மில்பர்ன் கூறுகிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே ருமேனியாவுக்கு அடுத்து நீட் பாதிப்புக்கு உள்ளான 2-வது நாடாக இங்கிலாந்து நாடு உள்ளது.

சில மாதங்களில் 2-வது அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் அறிக்கையில் வெளியான தகவலிலேயே, வாழ்க்கையில் நீண்டகாலத்திற்கு, மாறாத பாதிப்பு ஏற்படுத்த கூடிய விசயங்கள் உள்ளன என்றும் அதற்கு தீர்வு காண வேண்டிய அவசியமும் சுட்டி காட்டப்பட்டு உள்ளது.