வாஷிங்டன்,
உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, அமெரிக்காவிலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் அல்வா பிரியர்களின் நீண்ட நாள் ஏக்கம் நனவாகியுள்ளது.
திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தயாராகும் இருட்டுக்கடை அல்வாவும் தான். தங்களின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான சுவையால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நாவைக் கவர்ந்த இருட்டுக்கடை அல்வா, கடல்கடந்து அமெரிக்காவிலும் கால் பதிக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் நெல்லை அல்வா பிரியர்கள் இனி அசல் இருட்டுக்கடை அல்வாவைத் தேடி அலைய வேண்டியதில்லை என இருட்டுக்கடை நிர்வாகி கவிதா சிங் தெரிவித்துள்ளார். இதற்காக, இன்று (புதன்கிழமை) பிரத்யேக விநியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த சேவை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த விநியோக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கும் அல்வாவை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் அல்வா பிரியர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, தங்களின் ஆர்டர்களைப் பதிவு செய்து அல்வாவைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்: (248) 250-3200. பாரம்பரியம் மாறாத நெல்லை இருட்டுக்கடை அல்வா இனி அமெரிக்காவிலும் நேரடியாக கிடைப்பது அங்குள்ள தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.