உலக செய்திகள்

புதிய பிரதமர் நேற்று பதவியேற்ற நிலையில்.. நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது

நேபாள நாட்டின் 47-வது பிரதமராக என்ஜினீயரும், பாடகருமான பலேந்திரஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

காத்மாண்டு,

நேபாளத்தில் இளையதலைமுறையினருக்கு டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் கடுமையான ஊழலில் ஈடுபட்டு சொத்து குவித்ததாக கூறி 'ஜென்-சி' என்னும் இளைய தலைமுறையினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்த போராட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் பெண் நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். மேலும் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதாக தலைநகர் காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பலேந்திரஷா அறிவித்தார். காத்மாண்டுவின் முதல் சுயேச்சை மேயரான இவர் முன்னாள் பாடகராவர். சமூக நீதி, ஏழ்மை, சமூக கருத்துகள் உள்ளிட்டவை குறித்து அவர் சிறுவயது முதல் பாடல்கள் பாடி வருகிறார். ரசிகர்களால் 'பலேன்' ஷா என அழைக்கப்படும் 35 வயதான இவர் ஜென்-சி போராட்டத்தின்போது ஆதரவாக செயல்பட்டார்.

அதன்படி மார்ச் 5-ந்தேதி நடந்த பொதுத்தேர்தலில் ராஷ்ட்ரீய சுவந்த்ரா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை எதிர்த்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்டு 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றார். 275 இடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பலேந்திரஷாவின் கட்சி 182 இடங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தது. நேபாளி காங்கிரஸ் கட்சி 38 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25 இடங்களும், கம்யூனிஸ்டு கட்சி 17 இடங்களும் மட்டுமே பெற்றன. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் 47-வது பிரதமராக பலேந்திரஷா நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய பிரதமர் நேற்று பதவியேற்ற நிலையில்.. நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய 'ஜென்-சி' தலைமுறை போராட்டங்களில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கும் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் சுதன் குருங் தனது எக்ஸ்வலைதளத்தில், “கொடுத்த வாக்கு, கொடுத்த வாக்குதான்.. சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் பதவி விலகும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரை நாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். இது யாருக்கும் எதிரான பழிவாங்கல் அல்ல. இது நீதியின் தொடக்கம் மட்டுமே. இனி நாடு ஒரு புதிய திசையை நோக்கிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.