உலக செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: இன்னும் சில மணி நேரங்களில் பீகாரை தாக்கும்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியர்கள் 105 பேர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகி உள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் அதிகாரபூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.

காத்மாண்டு,

கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளமானது இன்னும் சில மணி நேரங்களில் பீகாரை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான சேதம்

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கரையோரம் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.

105 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தை கடந்து திபெத்தில் உள்ள கியிரோங் பகுதியில் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த வெள்ளத்திற்கு பிறகு 105 இந்தியர்கள் உட்பட 384 வெளிநாட்டினர் மாயமாகி உள்ளனர். அதில் 17 பேர் மலேஷியாவையும், 12 பேர் பிரிட்டனையும், 4 பேர் தென் ஆப்ரிக்காவையும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த தலா ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 3 பேர் பற்றிய தகவல் இல்லை. எஞ்சியவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் ஏதும் இல்லை.

22 பேர் மீட்பு

கைலாஷ் யாத்திரை சென்ற நிலையில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் பெருவெள்ளத்தில் சிக்கிய நிலையில், ஒரு பஸ்சில் பயணித்த 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

40 வீரர்களை காணவில்லை

இந்த திடீர் வெள்ளத்தில் 32 போலீசார் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த எட்டு பேர் என மொத்தம் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பீகாரை தாக்கும் வெள்ளம்

நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளமானது இன்னும் சில மணி நேரங்களில் பீகாரை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சூழலை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கவும், மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் - உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு

India: 1800 309 3793

To contact: +91 8069009901 / 08069009901

Missed call: +91 8069009900 / 08069009900

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட உதவி எண்கள்

+977 985 131 6807

+977 970 910 7500

பனிப்பாறை உடைந்ததால் வெள்ளப்பெருக்கா?

இந்நிலையில் பனிப்பாறை உடைந்து லெண்டே ஆற்றில் விழுந்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.