உலக செய்திகள்

வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த நேபாளம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியது - ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலை என்ன..?

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 37 தமிழர்கள் உள்பட 133 இந்தியர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

காத்மாண்டு,

வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளம்-திபெத் எல்லை

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதி, நேபாளம்-திபெத் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் லெண்டே கோலா ஆறு, நேபாளம்-திபெத் எல்லைப்பகுதி வழியாக பாய்ந்து ரசுவாகடி பகுதியை அடைகிறது. இந்த ஆறும், பிற சிறிய ஆறுகளும் ரசுவாகடி பகுதியில் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கிப் பாய்கின்றன.

வெள்ளப்பெருக்கு

இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

குறிப்பாக டிமுரே, சியாப்ருபேசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60 வீடுகள் முழுமையாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் இருந்து சீன எல்லையை இணைக்கும் 42 கிலோ மீட்டர் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்தன. அதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் மின்கம்பிகள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மீட்பு பணி

இந்த தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம் மற்றும் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் களம் இறங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

200 உடல்கள் மீட்பு

இந்தநிலையில், வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோரின் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அச்சம் நிலவுகிறது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா

இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ள ரசுவா பகுதி, இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் ஆன்மிக பயணத்துக்கு செல்பவர்களுக்கு மிக முக்கியமான பகுதியாகும்.

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு செல்லும் பக்தர்கள், அங்கிருந்து திபெத்தின் கெய்ருங் எல்லை வழியாக கைலாஷ் மானசரோவருக்கு செல்ல பெரும்பாலும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

133 இந்தியர்கள்

இந்தநிலையில் நேற்று திபெத்துக்கு செல்ல திட்டமிட்டு ரசுவாகடி பகுதியில் ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்தனர். வெள்ளத்துக்கு பிறகு அவர்களில் பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் கிட்டத்தட்ட 500 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதில் நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 500 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 32 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

37 தமிழர்கள் கதி என்ன?

இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர்.

இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

தமிழக அரசு அவசர உதவி எண்

அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண் 9289516712 ஆகும்.

நிவாரண உதவிகள்

இதற்கிடையே, நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும் தீவிரப்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை விரைவாக மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் நேபாள அரசின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய விமானப்படையும் மீட்புப்பணியில் இணைந்து செயல்படுகிறது.

சேதத்தின் முழு அளவையும் வெள்ளத்திற்கான காரணத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.